“வள்ளலார் புகழ் உலகெங்கும் பரவட்டும்!” வடலூர் சர்வதேச மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகுக்குச் சொன்ன வள்ளலார் பெருமகனாரைப் போற்றும் வகையில், தமிழக அரசு இன்று பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வள்ளலார் சர்வதேச மையத்தை (Vallalar International Centre) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, சன்மார்க்க நெறியில் சிறந்த சேவை புரிந்த அன்பர்களுக்கு அரசு சார்பில் விருதுகளையும் வழங்கி அவர் சிறப்பித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் 'அனைத்துலக வள்ளலார் மாநாடு - 2026'-ஐ முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் ஆகியவற்றை முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வள்ளலார் நீண்ட காலம் வாழ்ந்து, "தெய்வமணிமாலை" உள்ளிட்ட பாடல்களைப் பாடிய திருவொற்றியூர் பகுதியைப் பெருமைப்படுத்தும் வகையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான புதிய பெயர்ப்பலகையையும் அவர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!
வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க நெறி என்பது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தின் உச்சம். வடலூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச மையம், உலகெங்கிலும் உள்ள சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும். திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு அவர் பெயரைச் சூட்டுவதன் மூலம் அவரது புகழ் வருங்காலத் தலைமுறையினருக்கும் சென்றடையும்.
இதையும் படிங்க: கீழடியில் இந்தியாவின் முதல் திறந்தவெளி அருங்காட்சியகம்!: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!