×
 

மோடி விசிட்டிற்கு முன்பே முந்திக்கொண்ட மு.க.ஸ்டாலின்... ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி அறிவிப்பு..!

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆட்சி புரிந்தார்.ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஆடி தமிழ் மாதம் ஆடி திருவாதிரை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி தமிழ் மாதம் திருவாதிரை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டத் தொடங்கிய 1000வது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இதனிடையே ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட கட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2வது நாளாக அப்போலோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. விடிந்ததும் வெளியான முக்கிய மருத்துவ அப்டேட்..!

அதில் விவசாய பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் தேவைக்காகவும்  ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியில் கரைகளை பலப்படுத்துதல்,  வரத்து வாய்க்கால்கள் மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்டபல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம்  1374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம். நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர் வழிகாட்டிப் பலகை. கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள். கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில்,  “கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது #DravidianModel அரசு!

அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பூரண உடல்நலம் பெற இபிஎஸ் பிரார்த்தனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share