×
 

பீகார் தேர்தல் முடிவுகள்: அனைவருக்குமான பாடம்..!! முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன..??

பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு (என்டிஏ) கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 243 தொகுதிகளில் 202 இடங்களைப் பெற்ற என்டிஏவில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 89 இடங்களைத் தக்கவைத்துக்கொண்டது. ஜனதா தள (ஐக்கியம்) தலைவர் நிதிஷ் குமார் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்து, இந்த முடிவு அவற்றின் தவறுகளை மறைக்காது என்கிறார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "பீகார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமாருக்கு வெற்றிக்காக நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். அதேபோல், இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் ஓய்வில்லாத பிரச்சாரத்தையும், முயற்சியையும் நான் பாராட்டுகிறேன்.

இதையும் படிங்க: பரபரக்கும் தேர்தல் களம்... பீகார் வாக்கு எண்ணிக்கை தீவிரம்! தேஜஸ்வி முன்னிலை...!

தேர்தல் முடிவுகள் என்பது நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைதல், கூட்டணிகள், தெளிவான அரசியல் செயல்பாடுகள் மற்றும் இறுதி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தத் தேர்தல் செய்தியைப் புரிந்துகொண்டு, உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள வியூக ரீதியாகத் திட்டமிடக்கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஆவர்.

இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்களையும், பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் மூடிமறைத்துவிடாது. தேர்தல் ஆணையத்தின் மதிப்பு மிகக் குறைந்த நிலையில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள், வலுவான, மேலும் பாரபட்சமற்ற ஒரு தேர்தல் ஆணையத்தை பெற உரிமையுடையவர்கள். அத்தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வெற்றி பெறாதவர்களிடம்கூட நம்பிக்கையைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. என்டிஏவின் வெற்றி மத்திய அரசின் கொள்கைகளை வலுப்படுத்தும். மகாகத்பந்தனின் தோல்வி, காங்கிரஸின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஸ்டாலினின் கருத்துகள், தென்னிந்திய அரசியல் கட்சிகளின் தேசிய அளவிலான நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. பீகார் மக்களின் இந்த முடிவு, நாட்டின் அரசியல் களத்தில் புதிய உந்துதலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி... இரண்டே இடத்தில் தான் முன்னிலை! காங்கிரஸ் நிலை கவலைக்கிடம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share