×
 

கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

தமிழக ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'கலைஞர் பல்கலைக்கழக மசோதா 2025' மற்றும் 'தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா 2025' ஆகியவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் இக்கடிதம் அமைந்துள்ளது.

தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் 8 மாவட்டங்கள் உள்ளதால், நிர்வாக ரீதியாக மாணவர்களின் தேவைகளைக் கவனிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதைப் போக்க டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி இப்புதிய பல்கலைக்கழகம் அமைய உள்ளது.

இதையும் படிங்க: நாளை வேலூர் வருகிறார் திரவுபதி முர்மு..!! பாதுகாப்பிற்காக 1,200 போலீசார் குவிப்பு..!!

குறிப்பாக அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பின்தங்கிய மற்றும் கடலோரப் பகுதி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை (GER) உயர்த்த இது வழிவகுக்கும்.

கும்பகோணத்தில் 54.86 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இப்பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்காகும்.

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்களை ஆளுநர் நீண்ட காலம் நிலுவையில் வைத்து, பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 200-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்துத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழக மக்களின் கல்வி உரிமையை உறுதி செய்யவும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி குடியரசுத் தலைவர் அவர்கள் இந்த மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

இதையும் படிங்க: மதுரை: புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share