×
 

உடன்பிறப்புகளே..!! எலக்ஷனுக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு.. களப்பணி ஆற்றணும்..!! மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் திமுக உடன்பிறப்புகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கழகத் தொண்டர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு...” என்று தொடங்கும் அவரது பதிவில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளதாகக் குறிப்பிட்டார். 

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. செல்லும் இடமெல்லாம் திமுகவினரின் எழுச்சியையும், தமிழ்நாட்டு மக்களின் முகத்தில் மலரும் மகிழ்ச்சியையும் காண்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மக்களுக்கு நல்ல பயனைத் தந்துள்ளதாகவும், வரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றவிருக்கும் புதிய திட்டங்கள் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தொகுதிகளிலும் இந்த உணர்வு வெளிப்படுவதாக அவர் கூறினார். திமுக தொண்டர்களின் தேர்தல் களப்பணி எப்போதும் எதிரிகளாலும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என்ற வரலாற்றை நினைவுபடுத்திய முதலமைச்சர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 75,000 பாகங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருவதைப் பாராட்டினார். மக்களுடனான இந்த உறவு தொடர வேண்டும் என்றும், இனிவரும் நாட்களில் மக்களோடு மக்களாகக் களத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

ஒவ்வொரு கிராமத்திலும், வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும், “நானே நிற்கிறேன்” என்ற உணர்வுடன் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முதிய தலைவர்களின் அர்ப்பணிப்பையும் ஸ்டாலின் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பிரசாரம் செய்வதையும், 80 வயதைக் கடந்த அண்ணன் சிதம்பரம், வைகோ ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியின் அருமையை மூலை முடுக்கெல்லாம் எடுத்துரைப்பதையும் பாராட்டினார். 87 வயதான கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களும், 28 வயது இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி (அவிநாசி தொகுதி) உள்ளிட்டோரும் தீவிரமாகக் களத்தில் சுழன்று கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு உறுதுணையாக திமுகவினரும் தோழமைக் கட்சியினரும் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

உடன்பிறப்புகளின் உழைப்பின் மீது தனக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஸ்டாலின், “இந்தத் தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்” என்று உறுதியாகக் கூறினார். குறிப்பாக, தமிழ்நாட்டுப் பெண்களின் முகத்தில் தெரியும் மலர்ச்சி, இளைஞர்களின் நம்பிக்கை, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் DMK-வின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக வலியுறுத்தினார்.

வாக்குப்பதிவு நாளில் இந்த ஆதரவை வெற்றியாக மாற்றுவது தொண்டர்களின் கடமை என்றார். “முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி” என கலைஞர் அடிக்கடி சொன்னதை நினைவுபடுத்திய அவர், ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்றும், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என ஒவ்வொரு தொகுதியிலும் உழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஸ்டாலின், ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றார். இதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் “திராவிட மாடல் 2.0” ஆட்சியை அமைத்துக் காட்டுவோம் என்ற பெருமையை விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share