நானே பதிவு செஞ்சுட்டேன், நீங்க ரெடியா? மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வர் விஜய் ட்வீட்!
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தனது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு' பணிகள் இன்று (ஜூலை 17, 2026) முறைப்படி தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் தொடக்கமாக, தமிழக முதலமைச்சர் விஜய் தனது குடும்ப சுயவிவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாகப் பதிவு செய்து, சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையைத் தொடங்கி வைத்தார்.
சுயவிவரங்களைப் பதிவு செய்த பின்னர், முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கியச் செய்தி அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை; நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா மக்கள் நலத்திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். இணையவழியில் சுய கணக்கெடுப்பு செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 16 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் பணிகள்!
முழுக்க முழுக்க காகிதப் பயன்பாடின்றி மொபைல் செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் நடைபெறும் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் கணக்கெடுப்பு இதுவாகும். இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் இருந்தபடியே se.census.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விவரங்களைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்பு நெட்வொர்க்குகள் மூலம் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த வரலாற்று மைல்கல் பணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் துல்லியமான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: செம்மொழி பூங்கா திட்டத்தில் ரூ.40 கோடி ஊழல்! திமுக ஆட்சியை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்!