×
 

தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை (10.08.2026) தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவருகிறார்.

சமீபத்தில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படாமல், மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையையும் தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முதலமைச்சர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு விழாக்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதன்முதலில் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும்.

இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை தொடர்பாக தீர்மானம்..! எண்ணிக்கை அதிகரித்தால் கேலிக்கூத்தாகும்... திருமா. பேட்டி..!!

தமிழின் பெருமையையும், தமிழ்த்தாய் வாழ்த்தின் மரபையும் எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் நாளை (ஆகஸ்ட் 10) சட்டப்பேரவைக் கூடியதும் இதற்கான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் மொழிகிறார்.

அனைத்துப் பொது அமைப்புகளும் இந்த விதியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், இதில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்றும் இத்தீர்மானத்தின் மூலம் அரசு முறைப்படுத்தவுள்ளது.

பல்கலைக்கழக விழாவில் எழுந்த சர்ச்சை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, தமிழ் மொழியின் உரிமையையும் அடையாளத்தையும் காக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டுவரும் இத்தீர்மானம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவு..! கலைவாணர் அரங்கில் முதல்வரை கண்டதும் ஆர்ப்பரித்த மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share