அமித் ஷாவுக்கு வீட்டு மசாலா பொடி.. மத்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம்! விஜய்யின் அதிரடி ஆர்டர்!!
மத்திய பாஜக அரசை தேவையின்றி அரசியல் ரீதியாகத் தாக்கவோ, கடுஞ்சொற்களால் விமர்சிக்கவோ கூடாது என விஜய் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே, மத்திய அரசுடனான உறவு எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதப்பொருளாக இருந்து வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து நிர்வாக மோதல்களைத் தவிர்த்து, நட்புறவை வலுப்படுத்துவதில் முதலமைச்சர் விஜய் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்தார். அப்போது முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான அந்தச் சந்திப்பில், தமிழகத்தின் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட வீட்டு மசாலாப் பொடிகளை பரிசாக வழங்கினார். தனிப்பட்ட அன்புடன் அளிக்கப்பட்ட இந்தப் பரிசு, இரு தலைவர்களிடையே நிலவும் இணக்கமான சூழலை வெளிப்படுத்தியது.
மத்திய அரசுடன் உருவாகியுள்ள இந்த நல்லுறவை எக்காரணத்தாலும் பாதிக்கக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதன் எதிரொலி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் தெரிந்தது. உறுப்பினர் வன்னி அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: உயிர்ம வேளாண்மையின் ஹீரோக்கள்! முதல்வர் கையால் நம்மாழ்வார் விருது..! இயற்கை விவசாயிகளுக்கு உயரிய அங்கீகாரம்..!
அவரது பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாகத் தலையிட்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை அவை விதிகளின்படி குறிப்பிலிருந்து நீக்கினார். இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. மத்திய பாஜக அரசை தேவையின்றி அரசியல் ரீதியாகத் தாக்கவோ, கடுஞ்சொற்களால் விமர்சிக்கவோ கூடாது என அமைச்சரவை சகாக்களுக்கு விஜய் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“உங்கள் கோரிக்கைகளை வையுங்கள். ஆனால் மத்திய அரசையோ, மோடி-அமித் ஷாவையோ விமர்சிக்காதீர்கள். நெருக்கமாக இருந்து நல்ல திட்டங்களை மாநிலத்திற்குப் பெற்றுத் தாருங்கள்” என்று அவர் கூறியதாக அறியப்படுகிறது. முந்தைய காலங்களைப் போல அரசியல் காரணங்களுக்காகத் தொடர் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது மாநில நலன்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், கொள்கை அளவிலான முரண்களை ஒதுக்கி வைத்து, நிர்வாக ரீதியில் டெல்லியுடன் சுமுகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதே தற்போதைய ஆட்சியின் வியூகமாக அமைந்துள்ளது.
நிதித் தேவைகள், திட்ட ஒப்புதல்கள், கட்டமைப்பு வளர்ச்சி போன்றவற்றில் மத்திய ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அணுகுமுறையின் அடிப்படை. விஜயின் இந்த உத்தி தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்... தவிக்கும் குடும்பங்கள்..! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.!