பெரம்பூர் தேர்தல் வழக்கு! முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு!
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை அக். 14-க்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதுடன், வரும் அக்டோபர் 14-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றுத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் முறையான முழு சொத்து விவரங்களை வெளியிடாமல் மறைத்ததாகவும், எனவே அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று தீவிர விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் கடுமையான சட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: "தலைமகன் தளபதி... எளிமையான தலைவன்"..! சர்ச்சைகளுக்கு டாட் வைத்த நாஞ்சில் சம்பத்..!
அப்போது வாக்காளர் தினேஷ் தரப்பில், வேட்புமனுவில் குற்றவியல் வழக்குகள் தொடர்பான விவரங்களை மறைப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி எந்த அளவிற்குத் தீவிரமான விதிமீறலோ, அதேபோல அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடாமல் மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல; அது அப்பட்டமான ஊழல் நடவடிக்கையாகும். வாக்காளர்களுக்கு வேட்பாளரின் முழு பின்னணியையும் தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு; எனவே இந்த வழக்கை நிராகரிக்கக் கூடாது; விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
முதல்வர் விஜய் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள தீர்ப்புகள் அனைத்தும் குற்றவியல் வழக்குகள் சம்பந்தப்பட்டது மட்டுமே; சொத்து விவரங்கள் சார்ந்த எளிய விவகாரங்களுக்கு அது பொருந்தாது. எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தத் தேர்தல் வழக்கை விசாரணைக்கு ஏற்காமல் உடனடியாக நிராகரிக்க வேண்டும்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகத் தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 14-ஆம் தேதி இந்த மனு மீது முறையான தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!