×
 

கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு இந்திய கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் தொடங்கியுள்ளது. 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல்வழியாக மும்பைக்குள் ஊடுருவி நடத்திய பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, இத்தகைய ஒத்திகைகள் தொடங்கப்பட்டன. 

இந்திய கடற்படை, கடலோர காவல் படை, மாநில போலீஸ் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி, கடல் வழி தீவிரவாத ஊடுருவலைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 'சாகர் கவாச்-2026' ஒத்திகை இன்று காலை 8 மணியளவில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தொடங்கியது. மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம், மரக்காணம், பழவேற்காடு, ஆரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படை வீரர்கள், கடலோர காவல் படையினர், தமிழ்நாடு போலீஸார் மற்றும் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒத்திகையின் போது, பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவ முயற்சிப்பது போன்ற காட்சிகளை உருவகப்படுத்தி, பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கண்டுபிடித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. கடற்கரைப் பகுதிகளில் வாகன சோதனை, சந்தேக நபர்களிடம் விசாரணை, கடலுக்குள் ரோந்துப் படகுகள் மூலம் கண்காணிப்பு ஆகியவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, மீனவர்களின் உதவியுடன் படகுகளில் கடலுக்குள் சென்றும் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

பழவேற்காடு பகுதியில் கடலோர பாதுகாப்புப் படையினர் மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மீன்பிடி படகுகளையும் சோதனை செய்தனர். இதில் நீலாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி உள்ளிட்ட அதிகாரிகள் முக்கியப் பங்கு வகித்தனர். பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் இதுகுறித்து கூறுகையில், “ஒத்திகை நடைபெறும் போது மீனவர்கள் தங்கள் பயோமெட்ரிக் அடையாள அட்டை மற்றும் படகு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். 

கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் அல்லது அந்நியர்களின் நடவடிக்கைகளை கவனித்தால் உடனடியாக 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அல்லது உள்ளூர் காவல் நிலையங்கள், மீன்வளத் துறை அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஒத்திகை நாளை இரவு 8 மணி வரை தொடரும். கடலோரப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்தகைய பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவது முக்கியமானது என்பது பாதுகாப்பு வட்டாரங்களின் கருத்து.

இதையும் படிங்க: ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share