×
 

பொள்ளாச்சியில் விதிமீறிய 6 கல் குவாரிகள் மூடல்! மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அதிரடி உத்தரவு!

பொள்ளாச்சி அருகே நம்பர் 10 முத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கிய 6 கல் குவாரிகளையும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே நம்பர் 10 முத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 6 கல் குவாரிகளையும் தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஐ.ஏ.எஸ். அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விவசாயி ஒருவரின் 8 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நம்பர் 10 முத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாகக் கல் குவாரிகள் இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கூறி முருகானந்தம் என்ற விவசாயி கடந்த 8 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இப்போராட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இப்பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நேற்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 8 அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவினர் நம்பர் 10 முத்தூர் பகுதியில் இயங்கி வந்த கல் குவாரிகளில் நேரில் சென்று அதிரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

அதிகாரிகள் நடத்திய விரிவான கள ஆய்வின் அறிக்கை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், விதிமுறைகளை மீறிச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் இயங்கி வந்த 6 கல் குவாரிகளையும் தற்காலிகமாக உடனடியாக மூட உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து விவசாயி முருகானந்தம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share