வீடு, வீடாக கதவை தட்டி உதவி கேட்ட மாணவி!! கோவை கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! போலீசார் முரண்!
கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் கூறிய தகவலுக்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் பரவலான பேச்சு எழுந்துள்ளது.
கோவையில் நடந்த கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால், போலீசார் வெளியிட்ட தகவல்களுக்கும், உண்மையான நிகழ்வுகளுக்கும் இடையே தோன்றும் முரண்பாடுகள் பொதுமக்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த சம்பவம் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால், போலீசின் விளக்கங்கள் மீது சந்தேகம் அதிகரித்து வருகிறது.
கடந்த நவம்பர் 2 இரவு, கோவை விமான நிலையத்தின் பின்புறம், ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பகுதியில், 20 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மூன்று மனிதர்கள் அங்கு வந்து கார் கதவின் கண்ணாடியை உடைத்து, இளைஞரை வெளியே இழுத்து கடுமையாகத் தாக்கினர். பின்னர், மாணவியை சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி, முழு நாட்டையும் உலுக்கியது. போலீசார் விரைந்து செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ் (30), அவரது சகோதரர் கார்த்திக் (21), மற்றும் தங்கள் தூர உறவினர் குணா (20) ஆகிய மூவரையும் கைது செய்தனர். கைதுசெய்யும் போது, குற்றவாளிகள் போலீசாரைத் தாக்கி தப்பி ஓட முயன்றதாகக் கூறி, அவர்களின் கால்களில் குறிபார்த்து சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உண்மை குற்றவாளிகளா? யாரையோ பிடிச்சு தண்டிச்சுடலாம்னு நினைக்காதீங்க! வளர்மதி சந்தேகம்!
ஆனால், இந்தச் சம்பவத்தைச் சுற்றி போலீசின் கூற்றுகள் பல இடங்களில் முரண்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சம்பவம் நடந்த உடன், அதிகாலை 3 மணிக்கு இளைஞர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக ஒரு கூற்று வெளியானது. ஆனால், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தனது பேட்டியில், இரவு 11:20 மணிக்கே இளைஞர் போன் செய்ததாகவும், போலீசார் 11:35 மணிக்குள் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் கூறினார். இந்த நேர முரண்பாடு, போலீசின் துரிதமான செயல்பாட்டைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், மாணவியைத் தேடும் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு மணி நேரத்திற்கும் மேல் தேடியதாகவும், அவர்களே மாணவியை மீட்டதாகவும் கமிஷனர் தெரிவித்தார். ஆனால், உண்மையில் நடந்தது வேறு. சம்பவத்திற்குப் பிறகு, மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு சென்று, கதவைத் தட்டியதாகவும், கதவு திறக்கப்படாததால் முதல் மாடிக்கு ஏறி, வீட்டில் இருந்தவர்களிடம் உதவி கேட்டதாகவும் தெரிகிறது.
அப்போதுதான் அவர்கள் மாணவியை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கூறும் படி, மூன்று குற்றவாளிகளும் மாணவியை அப்பகுதியில் உள்ள ஒரு சுவரின் பின்புறம் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், அந்தச் சுவரின் பின்னால் மாணவி மறைந்திருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அந்தச் சுவரின் உயரம் மிகவும் குறைவானது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, 100 போலீசார் தேடியும் அவரைத் தவறவிடுவது நம்பகமானதாகத் தெரியவில்லை.
அதேபோல், குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தேடிய இடம், புதர் மண்டியாகவும், காட்டுப்போன்றதாகவும் இருந்தது. இருள் சூழ்ந்த அந்த இடத்தில், தப்பி ஓடிய மூவரை அடையாளம் கண்டு காலில் சுட்டு கைது செய்த போலீசாருக்கு, காலியான இடத்தில் மாணவியைத் தேடி கண்டுபிடிக்க முடியாதது பல்வேறு தரப்பினரும் விந்தையாகக் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் உள்ள கேமராக்கள் குற்றவாளிகளின் முகங்களைப் பதிவு செய்யத் தவறியதாகவும், அவர்கள் முந்தைய கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த முரண்பாடுகள் பொதுமக்களிடையே போலீசின் செயல்பாட்டில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளன. போலீசார் இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுப்பதாக உள்ளது.
இதையும் படிங்க: Gen Z போராட்டம் எஃபெக்ட்..!! நேபாளத்தில் கலைக்கப்பட்ட 10 இடதுசாரி கட்சிகள்..!! உதயமான புதிய கட்சி..!!