×
 

ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

இதனால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 

தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் ஐடி மையமான கோவை மாநகரில், போக்குவரத்து நெரிசலையும் சாலை விபத்துகளையும் குறைக்கும் நோக்கில் கனரக வாகனங்களுக்கான நேரக் கட்டுப்பாட்டில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்படி, இது ஆகஸ்ட் 17 முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டில் முன்னணி நகரமாக உருவெடுத்துள்ள கோவை, குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் மையமாக விளங்குகிறது. சமீப ஆண்டுகளில் ஐடி துறையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கிளைகளைத் திறப்பதால் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 

விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இதனால் சாலைகளில் அழுத்தம் தொடர்கிறது.முன்னதாக அதிமுக ஆட்சியில் பல மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்டன. திமுக ஆட்சியில் முக்கிய சந்திப்புகளில் யூ-டர்ன் முறை அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சில நிவாரணம் கிடைத்தாலும், நெரிசல் பிரச்சினை முழுமையாக தீரவில்லை. 

இதையும் படிங்க: இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

இந்நிலையில், ஏற்கனவே காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் மாநகருக்குள் நுழைவதற்கு தடை இருந்தது. இப்போது அதை நீட்டித்து காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் மாற்றியுள்ளனர். இதனால் உச்ச நேரங்களில் கனரக வாகனங்களின் நுழைவு மேலும் கட்டுப்படுத்தப்படும். காவல்துறை, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. 

கனரக வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கு கனரக வாகனங்கள் அவசியமானாலும், உச்ச நேரங்களில் அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நெரிசல் குறையும் என்றும் விபத்துகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் நகரின் போக்குவரத்து நிலையை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share