×
 

கோவை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை 25 லட்சமாக சரிவு; ஆட்சியர் பவன்குமார் தகவல்!

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தப் புதிய பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், 3117 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடவடிக்கைகளால், தற்போது இந்த எண்ணிக்கை 25,74,608 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக 6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியாகக் கருதப்பட்ட கவுண்டம்பாளையத்தில் 5 லட்சத்திற்கும் மேல் இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 3,77,740 ஆகச் சரிந்துள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கான காரணங்களை மாவட்ட நிர்வாகம் துல்லியமாகப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, இறந்தவர்கள் 1,19,489 பேர், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 1,08,360 பேர் மற்றும் நிரந்தரமாக வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்த 3,99,159 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க:  "யார் யாருக்குப் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தெரியும்!" - விஜய்க்கு வானதி சீனிவாசன் பதில்! 

இதுதவிர, இரட்டைப் பதிவுகள் மற்றும் இதர காரணங்களுக்காகச் சுமார் 23,500 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 18.01.2026 வரை பொதுமக்கள் தங்களது பெயர் விடுபட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, திருத்தங்கள் அல்லது புதிய சேர்க்கைக்குப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும், இறுதிப் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்றும் ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போலீஸுக்கு சுதந்திரம் இல்லை… 2026-ல் இந்த நிலை மாறும் – அருண் ராஜ் உறுதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share