×
 

வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!

வகுப்பறையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில்  ரீல்ஸ் கலாச்சாரம் இருக்கக்கூடாது என மாணிக்கம் தாகூர் அறிவுரை

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மாணிக்கம் தாகூர், "வகுப்பறையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் இத்தகைய ரீல்ஸ் கலாச்சாரம் இருக்கக்கூடாது.இதனைத் தடுக்கக் கல்வித்துறையும், முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உரியக் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்றார்.

விருதுநகரில்  நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்த எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது : தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஆற்றிய உரை வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், மிகவும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் அமைந்திருந்தது. தமிழக அரசியல் மாறி வருவதன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குத் தனது சொந்தப் பாணியில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதனைச் 'சினிமா பாணி' என்று விமர்சிப்பதை விட, தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும் மாடலும், முதலமைச்சரின் மாடலும் மாறியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பழைய சொல்லாடல்கள் மாறி, சட்டமன்றம் தற்போது ஒரு ஜனநாயக முறைக்கு வந்துள்ளது. வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் நேரலையில்  பார்த்த ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடராக இது இருக்கும். 

இதையும் படிங்க: விஜய் பேச்சு ரீல்ஸ்க்கு சரியா போச்சு..? அந்த கட்சி பெயரை ஏன் சொல்லல CM..? கிருஷ்ணசாமி கிடுக்கிப்பிடி கேள்வி..!

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மோனியா வாயு கசிவால் ஏழைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் துயரமான சம்பவம். பாதிக்கப்பட்டவர்களை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக முதலமைச்சர் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளார்; முதலமைச்சரின் விரிவான அறிக்கை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்களுக்குள் இத்தகைய விபத்து நடந்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை போன்றவற்றில் எந்த அளவிற்கு முறைகேடுகளும் ஊழல்களும் மண்டிப் போயிருக்கின்றன என்பதற்கு இந்த விபத்து ஒரு சான்றாகும்.  எனவே, தொழில்துறை வழிகாட்டுதல்களை இந்நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா, அதிகாரிகள் எவ்வளவு நேர்மையாகச் செயல்படுகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டின் நலனில் தமிழக அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில், மத்திய அரசுடன் பரஸ்பர மரியாதையுடனான உறவைப் பேணுவதும் முக்கியம். சண்டை போடுவதோ, வீம்பு பண்ணுவதோ அரசியல் அல்ல; தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நியாயமான உரிமைகள் வர வேண்டும். கேரளா, கர்நாடகா, தெலங்கானா என எந்த மாநிலமாக இருந்தாலும் முதலமைச்சர்கள் பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. மாநிலத்தின் அடிப்படை உரிமைகள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் சமரசம் இல்லாதவரை மத்திய-மாநில அரசுகளின் உறவு பரஸ்பர நம்பிக்கையோடு நீடிப்பது அவசியமானது.


உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தன் தொகுதியில் நடந்த ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய விழாவில் குழந்தைகளிடம் தன் மகளைப் போல அன்பாக நடந்துகொண்டார். ஆனால், அந்த வீடியோவைச் சிலர் திட்டமிட்டு கட்-பேஸ்ட் செய்து, தவறாகச் சித்தரித்து வருவது வருத்தத்திற்குரியது. அவரது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் வந்தது கிடையாது; அவர் எப்போதும் கண்ணியமாக நடப்பவர்

காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் நம் மாநிலத்தின் குரலை வலுவாக எடுத்து வைப்பார்கள். நியாயம் நம்ம பக்கம்தான் இருக்கிறது. கர்நாடகா தங்களது விவசாய நிலங்களை விடுத்து, பெங்களூரு நகரக் குடிநீர்ப் பிரச்சினையை மையமாக வைத்து வாதாடுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் 100% தமிழக அரசின் முடிவுகளோடு என்றும் துணை நிற்கும்.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், அந்தந்த மாநிலத் தலைவர்கள் அம்மாநில மக்களின் தண்ணீர் நலனுக்காகவே பேசுவார்கள். தண்ணீர் பிரச்சினை என்பது நாடுகளுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும், ஏன் இரு கிராமங்களுக்கு இடையிலும் இருப்பதுதான். இதில் கட்சி முக்கியமல்ல, மாநிலத்தின் உரிமையே முக்கியம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் மேகதாது அணைக்கு எதிராகத் தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுப்பார்கள். தண்ணீர் விவகாரத்தில் சமரசம் பேசும் காலம் முடிந்துவிட்டது; நீதிமன்றமும், நதிநீர் ஆணையமும்தான் இதற்கு இறுதித் தீர்வு வழங்க வேண்டும்."

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் குறிப்பிட்டிருந்தது போல, ஆன்மீக நம்பிக்கை கொண்ட மக்கள் வைத்த நம்பிக்கைத் துரோகத்தின் உச்சமே இந்த ₹5,000 கோடி ஊழல் புகார். ஆர்எஸ்எஸ் போன்ற பின்னணி கொண்ட அமைப்புகளால் மட்டுமே இத்தகைய துரோகங்களைச் செய்ய முடியும். உலகெங்கும் உள்ள ராமர் பக்தர்களின் பணத்தைப் பெற்று, ராமருக்கே அல்வா கொடுத்துள்ளனர். இது ஒரு 'விஞ்ஞான ஊழல்'. இதனை மூடி மறைக்கப் பல முயற்சிகள் நடக்கின்றன; வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் இப் பிரச்சினையை எழுப்பும்.

விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை 'முன்னேற விழையும் மாவட்டங்கள் (Aspirational District) என்று அறிவித்து மோடி அரசு வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது. இதற்காக எந்த ஒரு சிறப்பு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை; இருக்கும் நிதியைக் காட்டி ஏமாற்றுகிறார்கள். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நான் பலமுறை கேள்வி எழுப்பியும் முறையான பதில் இல்லை.

பள்ளிக்கூடங்களில் கலை நிகழ்ச்சிகள் (Cultural Programs) நடத்துவது, பாடல்கள் பாடுவது என்பது எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி காலத்திலிருந்தே இருந்து வருவதுதான். அப்போது கேமரா இல்லை, இப்போது மொபைல் போன் இருப்பதால் ஆசிரியர்கள் அதனைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் போடுகிறார்கள். ஆனால், வகுப்பறையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் இத்தகைய ரீல்ஸ் கலாச்சாரம் இருக்கக்கூடாது. இதனைத் தடுக்கக் கல்வித்துறையும், முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உரியக் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

 செல்வப்பெருந்தகை அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தன் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்து வருகிறார்.அவரது தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சி இரண்டு சட்டமன்றத் தேர்தல்களையும், ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளது. அவர் அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்களுடனான இந்தச் சந்திப்பைக் குறித்து ஊடகங்கள் தங்களுக்குத் தோன்றியவாறு கதைகளைக் கட்டி எழுப்பி, கட்சியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

"ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தொழிலதிபர் அதானியின் உதவியால் அவசர அவசரமாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கட்சியாகும். மூப்பனார் அவர்கள் இருந்த காலத்தில் இருந்ததுதான் உண்மையான தமிழ் மாநில காங்கிரஸ். மொரார்ஜி தேசாயும், சவுத்ரி சரண் சிங்கும் இருந்தபோது மக்கள் ஆதரவோடு இருந்த ஜனதா கட்சியை, பிற்காலத்தில் யாரோ ஒருவர் விலைக்கு வாங்கிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் அது எப்படி உண்மையான ஜனதா கட்சி ஆகாதோ, அதேபோல்தான் தற்போதைய தமாகாவும் ஆகும். தற்போதைய தமாக என்பது வெறும் 'டம்மி பீஸ்'."

அதேபோல், செல்வப்பெருந்தகை அவர்கள் கடிதம் கொடுத்ததை வைத்துப் புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா எனக் கேட்கிறீர்கள். இதையெல்லாம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர்தான் முடிவு செய்ய முடியும். செல்வப்பெருந்தகை தற்போதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தொடர்ந்து நீடிக்கிறார். கடந்த வாரம்கூட நாங்கள் அனைவரும் டெல்லியில் தலைவர் கார்கே அவர்களைச் சந்தித்தோம். அவர் எப்போதும் எங்களை எளிதில் சந்தித்துப் பேசக்கூடிய, எங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய அதிகாரம் படைத்த உன்னதத் தலைவர். எனவே, நீங்களாகவே ஒரு கதையை உருவாக்கி, அதையே என்னிடம் கேள்வியாகக் கேட்பது நியாயமற்றது.

இதையும் படிங்க: "மலையாய் குவிந்த பிரச்சனை"..! தேவையற்ற பேச்சு... அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய H.ராஜா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share