வெறுப்பு அரசியலை வைத்து ஓட்டுப் பெறுவதே நோக்கம் - பாஜகவை விமர்சித்த சசிகாந்த் செந்தில்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், பா.ஜ.க. வெறுப்பு அரசியலைக் கையிலெடுப்பதாகக் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான அண்மைய விவகாரத்தில், பாஜக மற்றும் சில இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்துக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெறுப்பு அரசியலைத் தூண்டி அதன் மூலம் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் ஒரே நோக்கம் என்று அவர் சாடியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயில் மலையின் உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வரலாற்றுச் சான்றுகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு (டிசம்பர் 3) மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராகக் கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை மேல்முறையீடு செய்தது. கார்த்திகை தீபத்திருநாளன்று, மீண்டும் விசாரணை நடத்திய நீதிமன்றம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பாதுகாப்புடன் மனுதாரர் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இந்து அமைப்புகள் மலைக்குச் செல்ல முயன்றதால், அந்தப் பகுதியில் கடுமையான பதற்றமும், பரபரப்பும் நிலவியது. தமிழகக் காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி
இதுகுறித்து கருத்து தெரிவித்த சசிகாந்த் செந்தில் எம்.பி. கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றத்தில் பாஜகவும், அதே அரசியலை கையிலெடுக்கும் அமைப்புகளும் செய்த செயல் புதிதல்ல, அவர்கள் தொடர்ச்சியாகச் செய்வதுதான். கர்நாடகத்திலும் இதைத்தான் செய்தார்கள், பல மாநிலங்களில் இதைப் பார்த்துவிட்டோம். இந்த வெறுப்பு அரசியலை வைத்து ஓட்டுப் பெறுவது மட்டுமே இவர்களது எண்ணம்.
மேலும், மத ரீதியான உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனினும், இந்தச் சூழலைத் தமிழக அரசு சட்டம்-ஒழுங்குடன் மிகச் சிறப்பாகக் கையாண்டதாகவும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தலையீட்டையும் தாண்டி, பாஜகவின் அரசியல் செயல்பாடுகளை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காமராஜர் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை கோரி நாடார் அமைப்புகள் புகார்!