அடுத்த பிரதமர் விஜய்னா காங்கிரஸ் என்ன சொல்லுது? தூத்துக்குடியில் கனிமொழி எம்பி கேள்வி!
அடுத்த பிரதமர் விஜய் என்ற அமைச்சர்களின் பேச்சுக்கு திமுகவின் கருத்தை விட காங்கிரஸ் கட்சியினரின் பதிலே முக்கியம் என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் ஆளும் தவெக அமைச்சர்கள் சிலர் அடுத்த பாரதப் பிரதமர் விஜய் தான் என்று முழங்கிய விவகாரம் தொடர்பாக, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர்தான் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திப் பதில் அளிக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்றப் பேரவை விவாதத்தின் போது தவெக அமைச்சர்கள் அடுத்த பிரதமராக விஜய் வருவார் எனப் பேசியது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர்கள் கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, நாங்கள் சொல்வதற்கு இதில் ஒன்றுமில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் அரசியல் வரலாற்றை சுட்டிக்காட்டினார். முந்தைய காலகட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியே ராகுல் காந்தியின் பெயரை வெளிப்படையாகப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்கிய தருணத்திலேயே, 'ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்' எனத் தேசிய அளவில் முதல் ஆளாக துணிச்சலாக முன்மொழிந்தவர் எங்கள் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின். ஆனால், இன்று தவெக கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டு அவர்களின் அமைச்சர்களே விஜயைப் பிரதமர் என்று அறிவிக்கும் போது, தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை காங்கிரஸ் கட்சியினர்தான் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!
இதையும் படிங்க: கர்நாடகாவில் கால் பதிக்கிறதா? பெங்களூரில் தவெக வியூகம் ஆரம்பமா? கன்னட நாளிதழ்களில் விஜய் கட்சியின் விளம்பரம்!!