வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இந்தி பெயர்ப்பலகையை ரயில்வே நிர்வாகம் அகற்றியது.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இந்திப் பெயர்ப் பலகைகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் தலைவர்களின் கண்டனத்தைத் தொடர்ந்து இன்று அதிரடியாக அகற்றப்பட்டன. 'இந்தித் திணிப்பு' என்ற குற்றச்சாட்டு வலுத்த நிலையில், ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக முகப்பில், 'Divisional Railway Manager' என்ற ஆங்கிலப் பெயருக்கு இணையாக, 'கர்தவ்ய த்வார்' (Kartavya Dwar) என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. மேலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கூகுள் டிரான்ஸ்லேட் உதவியுடன் மிகத் தவறாகப் பொருளற்று இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். கீழ்மட்ட அதிகாரிகளின் இத்தகையத் தவறான மொழிபெயர்ப்புகளால் மத்திய அரசுக்குத் தேவையற்றக் கெட்டப் பெயர் ஏற்படுவதாகவும், தமிழின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!
இன்று காலை ரயில்வே ஊழியர்கள் அந்தச் சர்ச்சைக்குரிய எழுத்துக்களைப் பெயர்ப் பலகையில் இருந்து முழுமையாக அகற்றினர். 'கர்தவ்ய த்வார்' என்று எழுதப்பட்டிருந்த மும்மொழிப் பலகைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்தி வார்த்தைகளை அப்படியே தமிழில் ஒலிபெயர்ப்பு செய்ததற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதே இதற்குக் காரணம்.
சமூக வலைதளங்களில் இந்தப் பெயர்ப் பலகையின் புகைப்படம் வைரலாகி, "தமிழ்நாட்டில் எதற்கு இந்திப் பெயர்?" எனப் போராட்டங்கள் வெடித்தச் சூழலில், ரயில்வே நிர்வாகம் இறங்கி வந்துள்ளது. இனி வரும் காலங்களில் முறையானத் தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடியப் பலகைகள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே இந்தித் திணிப்பு விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதப் பொருளாக உள்ள நிலையில், திருச்சியில் நிகழ்ந்த இந்தத் திருத்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தி திணிப்பு புகாருக்கு இடம் கொடுக்காதீர்கள்! - ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!