மயில் இறகு மாலை... தவெக எம்.எல்.ஏ. இணைப்பு விழாவில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
இதனால், உண்மையான மயில் இறகு மாலையா அல்லது செயற்கையானதா என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கு மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசியப் பறவையான மயிலின் இறகுகளை மாலையாகப் பயன்படுத்தியது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகக் கருதப்படுவதால், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. சேலம் மாநகராட்சி அதிமுக பிரதிநிதிகள் சண்முகம், கண்ணன், அருள், ஐ.டி. விங் மணி ஆகியோருடன், திமுக தொடர்புடைய வீரபாண்டியார் நற்பணி மன்ற நிர்வாகி ஜெயராஜ் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் மைக்கேல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். இந்த விழாவில் இணைந்தவர்கள் எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கு மயில் இறகுகளால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர்.
இந்தியாவின் தேசியப் பறவையான மயில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இன் அட்டவணை-I-இல் இடம்பெற்றுள்ளது. இதன்படி, மயிலை வேட்டையாடுவதோ, அதன் உடல் பாகங்களைப் பயன்படுத்துவதோ கடுமையான குற்றமாகும். இயற்கையாக உதிர்ந்த இறகுகளைச் சேகரிப்பது பெரும்பாலும் குற்றமல்ல என்றாலும், அவற்றை விற்பனை செய்வதும் வாங்குவதும் பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. ஏற்றுமதி முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், உண்மையான மயில் இறகு மாலையா அல்லது செயற்கையானதா என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற விதிமுறையை மீறி இணைப்பு விழா நடத்தப்பட்டதும் கூடுதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கேரள மாநிலத்தில் மயில் இறகு மாலை அணிவித்து ஊர்வலம் சென்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு அணிவிக்கப்பட்ட மாலை தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த விவகாரம் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
இதையும் படிங்க: இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! 10 ஆண்டுகளுக்கு முன் PF பணத்தை எடுத்தால் பென்ஷன் கட்!! EPFO செக்!