இனிப்புடன் தொடங்கும் பட்ஜெட் பணிகள்! - நார்த் பிளாக்கில் களைகட்டிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் - லாக்-இன் முறையில் 70 அதிகாரிகள் சிறைபிடிப்பு!
இந்திய நாட்டின் வரவு செலவுத் திட்டமான மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதைக் குறிக்கும் பாரம்பரிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று புது தில்லியில் உள்ள நார்த் பிளாக்கில் கோலாகலமாக நடைபெற்றது.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பெரிய கொப்பரையில் அல்வா கிண்டப்பட்டு அதிகாரிகளுக்குப் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுவதன் தொடக்கமாகவும், ரகசியங்கள் கசியாமல் இருப்பதற்கான உறுதிமொழியாகவும் இந்த நிகழ்வு பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அல்வா பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் தயாரிப்பில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுமார் 70 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நார்த் பிளாக்கிலேயே தங்கும் லாக்-இன்காலம் தொடங்கியது. இவர்கள் அனைவரும் வெளியுலகத் தொடர்பின்றி, ரகசியத்தை உயிருக்கு நிகராகப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பட்ஜெட் அச்சகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.பிக்களுக்கு 'NO' லீவு..!! பிப்.1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்..!! ஓம் பிர்லா உறுதி..!!
இந்த ஆண்டு பட்ஜெட்டும் முழுமையாகக் காகிதமற்ற முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் மொபைல் ஆப் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பட்ஜெட் ஆவணங்களைச் சொடுக்கிய வேகத்தில் அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு