தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!
தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி வைக்க முடியாமல் தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது என்றும், இந்த முடிவின் மீது வைக்கப்படும் பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் கருத்துகளையும் துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மூ. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் மூ. வீரபாண்டியன், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் சமகால அரசியல் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது, அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தாராபுரம் தொகுதியில் சிபிஐ வேட்பாளராகத் தோழர் லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராகத் தோழர் சுகந்தியும் அதிகாரப்பூர்வமாகக் களம் காண்கின்றனர்.
ஒரு பொறுப்புள்ள அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் மக்களிடம் நேரடியாகச் சென்று தேர்தல் களமாடி வெற்றிபெற விரும்புகிறோம். தமிழக மக்கள் அரசியலற்ற நிலைக்குச் செல்வது நல்லதல்ல; மக்கள் மொழி, நாடு, வளர்ச்சி சார்ந்த சிந்தனைகளுடன் அரசியல்மயப்பட வேண்டும். பிளவுபட்டு நிற்கும் மக்களை ஒன்றுபடுத்தும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகள், தலித் மக்கள் மீதான ஆணவப் படுகொலைகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். அறிவியல் பூர்வமாக, அரசியல் பூர்வமாக ஒரு பண்பட்ட மனிதனை உருவாக்கும் கடமை கல்விக்கு மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளுக்கும் உண்டு என்றார்.
இதையும் படிங்க: தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!
தலைநகர் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரம் குறித்துப் பேசிய வீரபாண்டியன், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் மக்களின் வாழ்விடம், விவசாயம் மற்றும் கடலோரச் சூழலியல் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர். கடல் பரப்பை ஒட்டிய திறந்தவெளி என்பது நமது மாநிலத்திற்குக் கிடைத்த இயற்கையின் வரம். கடற்கரையோரம் பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடங்களை எழுப்புவது கடற்கரைக் காற்றைத் தடுப்பதுடன் கடுமையான சூழலியல் சீர்கேடுகளை உண்டாக்கும். எனவே, மக்களின் வாழ்வாதாரத்தையோ இயற்கைச் சூழலையோ பாதிக்காத வகையில் வேறு ஒரு பொருத்தமான இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோன்று, திருவாரூரில் கோயில் மனைகளில் பல தலைமுறைகளாகக் குடியிருப்போருக்கு நில வகை மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டைப் போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு மத்திய அரசும் துணைநிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொழிலாளர் நலன் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்துப் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தைப் பணிக்காலமாக ஏற்று அரசு அரசாணை வெளியிட வேண்டும். ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயகப்பூர்வமாக விமர்சிப்பவர்களை அரசு எந்த வகையிலும் அச்சுறுத்தக் கூடாது. இணையதளங்களில் கண்ணியமற்ற வார்த்தைகளையும் தரக்குறைவான வசைபாடல்களையும் பயன்படுத்துவதைத் தீவிரமாகக் கைவிட வேண்டும்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களில் ஈர்க்கப்படும் முதலீடுகள் என்ன துறைக்கானது, அது சிறுதொழில்களை வாழவைக்குமா அல்லது இயற்கையைச் சூறையாடுமா என்ற கேள்விகள் எழுகின்றன. பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவித்தாலும், அதன் உண்மையான பயன்கள் குறித்து அரசுகள் மௌனம் சாதிக்கின்றன. கடன் வாங்கித் தனியார் முதலாளிகள் கொழுக்க அரசு வழிவகுக்கக் கூடாது; உள்நாட்டுத் தற்சார்பு பொருளாதாரத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்தும் தனது கவலையைப் பகிர்ந்த அவர், இந்தியாவின் நட்பு நாடான வெனிசுலா நாட்டின் அதிபரை அமெரிக்கா கடத்திச் சென்றுள்ளது. ஒரு நாட்டின் அதிபரை மற்றொரு வல்லரசு நாடு அராஜகமாகக் கடத்திச் செல்வதை உலகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி, வெனிசுலா அதிபரை விடுவிக்க சர்வதேச அரங்கில் உரத்த குரல் எழுப்ப வேண்டும்.
அதேபோல் வங்கதேசத்தில் கருத்துச் சொன்னதற்காகப் பத்திரிகையாளர்களையும் அறிஞர்களையும் சிறையில் அடைத்துத் தூக்குத் தண்டனை விதிப்பதை ஏற்க முடியாது. அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய தேசங்களில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியா சர்வதேச அளவில் ஆக்கப்பூர்வமான அழுத்தங்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!