×
 

“10 லட்சம் பேருக்கு விளக்கம் கோரும் கடிதம் அதிர்ச்சியளிக்கிறது!” -2026 தேர்தல் நியாயமாக நடக்குமா? மு.வீரபாண்டியன் கேள்வி!

தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 10 லட்சம் பேருக்கு விளக்கம் கோரும் கடிதம் அனுப்பப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதால், தற்போதைய சிறப்புத் தீவிர திருத்த முறையை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பட்டியலையே பயன்படுத்த வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத் தலைமை தேர்தல் அலுவலரின் தற்போதைய அறிவிப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கணக்கெடுப்புப் படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்யாதவர்கள் எனக் கூறி மேலும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கோரும் கடிதம் அனுப்பப் போவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஆழமான சந்தேகங்களை எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று முறையான கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், பெரும்பாலான பகுதிகளில் ஒரு முறை மட்டுமே சென்று அவசரமாகக் கையெழுத்துப் பெற்றுச் சென்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கணக்கெடுப்பு படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் போதும் எனத் தலைமை தேர்தல் அலுவலரே ஊடகங்களில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விளக்கம் கோருவது மேலும் 10 லட்சம் வாக்காளர்களை நீக்கும் முயற்சியோ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய குளறுபடியான திருத்த முறையினால் 2026 சட்டமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: SIRக்கு பின்.. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் OUT..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

இந்தக் குழப்பமான சூழலைத் தவிர்க்க, தற்போது நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர திருத்த முறை வரைவுப் பட்டியலை இறுதி செய்வதைத் தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, தற்போது நடைமுறையில் உள்ள பழைய வாக்காளர் பட்டியலில் புதியவர்களைச் சேர்ப்பது மற்றும் இறந்தவர்களை நீக்குவது போன்ற சாதாரண திருத்த முறையுடன் 2026 தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தலுக்குப் பிறகு போதிய கால அவகாசம் கொடுத்து, வெளிப்படையான முறையில் துல்லியமான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: எழுதி வச்சுக்கோங்க… விஜய் தலைமையில் தான் ஆட்சி… எட்டாவது அதிசயம் இது… தவெக அருண்ராஜ் உறுதி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share