×
 

5 மாநில தேர்தல் முடிந்த கையோடு பாஜக செய்யப்போகும் ஷாக்கிங் சம்பவம்... உஷார்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்...!

வணிக சிலிண்டர் விலை உயர்வால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 
மாநிலச் செயலாளர் சண்முகம் "வணிக சிலிண்டர் விலை உயர்வினால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது" என்றார். மே தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலச் செயலாளர் சண்முகம்,விருதுநகர் மாவட்ட அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: 
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த  யுத்தத்தினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எரிவாயு விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 28-ஆம் தேதி யுத்தம் தொடங்கியபோது வெறும் 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இன்று 126 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர் விலை 3,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களிலும் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த சில நாட்களில் பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய பாஜக அரசு கடுமையாக உயர்த்த இருக்கிறது. இவ்வளவு நாளும் உயர்த்தாமல் இருந்தது தேர்தலை கணக்கில் கொண்டுதான். கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்த காலத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்காமல் தன் நண்பர்களுக்கு அந்த லாபத்தை கொள்ளை அடிக்க வைத்த அரசு, இன்றைக்கு சர்வதேச நெருக்கடியால் ஏற்படும் சுமை முழுவதையும் மக்கள் தலையில் சுமத்துவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் முடிந்தவுடனே இந்தியா முழுவதும் ரயில்வேயில் சுமார் 30,000 பணியிடங்களை குறைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

இது மொத்த பணியிடங்களில் சுமார் 2 சதவீதம் ஆகும். புதிய ரயில்கள், புதிய தண்டவாளங்கள், புதிய ரயில் நிலையங்கள் என்று ரயில்வே விரிவடைந்து வரும் நிலையில் பணியிடங்களை குறைப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. மேலும் பொதுத்துறையில் பணியிடங்கள் குறைக்கப்படும்போது பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கடுமையாக பாதிக்கப்படும். இளைஞர்களின் அரசு வேலை என்னும் கனவை தகர்த்திருக்கும் இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

உழைப்பு சுரண்டல் எல்லை இல்லாமல் தொடர்கிறது. எட்டு மணி நேர வேலை என்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. 10, 12, 16 மணி நேரம் என பல துறைகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் நிலை நாட்டு முழுவதும் நிலவுகிறது. எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்கிறோம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இவை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கவும் வெளியிடப்படும் கருத்து திணிப்பே என்று தெரிவித்தார். "விஜய் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது. இதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா, அவரே கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்" என்று கூறிய அவர், நிச்சயமாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடக்கும் பட்டாசு விபத்துகள் குறித்து கவலை தெரிவித்த அவர்,  ஒரே சம்பவத்தில் 25 பேர் உயிரிழப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தொழிற்சாலைகளில் விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவது மிகுந்த வருத்தத்திற்குரியது. தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு தொழிற்சாலை உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


சாதி அடிப்படையிலான தெரு, ஊர் பெயர்கள் குறித்து பேசிய அவர், திமுக அரசு காலனி, சேரி போன்ற பெயர்களை மாற்றுவதற்கான அரசாணை வெளியிட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாதியின் பெயரை நேரடியாக குறிப்பிடும் வகையில்( ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறச்சேரி )ஒரு கிராமத்தின் பெயர் அரசு ஆவணங்களில் இன்னும் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்று கூறிய அவர், அந்தக் கிராம மக்களுடன் கலந்தாலோசித்து பொருத்தமான புதிய பெயர் வைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

இதையும் படிங்க: 27 பேரில் எத்தனை சீட்டு கன்ஃபார்ம்!! தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி? பாஜக தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share