கரூர் அரசு வேலை சர்ச்சை..! CPM சண்முகம் எதிர்ப்பு..! வலுக்கும் கண்டன குரல்கள்..!!
கரூர் அரசு வேலை விவகாரத்துக்கு CPM சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே மேற்கொண்ட வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அரசு வேலை வழங்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்பு குறித்து சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் சண்முகம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
“தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா?” என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், இத்தகைய அறிவிப்புகள் வெளியாவது வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சண்முகம் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது ஒன்று, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை வழங்குவது முற்றிலும் வேறு. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தனது பொறுப்பில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரலாம். ஆனால் அரசு வேலை வழங்குவது என்பது பொது நிதியைப் பயன்படுத்துவது மற்றும் நிர்வாக ரீதியான முடிவு ஆகும். இதுபோன்ற சூழல்களில் தன்னிச்சையான அறிவிப்புகள் வருவதைத் தடுக்க, முறையான பொது வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரொம்ப சந்தேகமா இருக்கு..! ஒரே நாளில் ஆளுநரை சந்தித்த திமுக, அதிமுக..! CPM சண்முகம் கருத்து..!!
அத்தகைய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் வரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என சி.பி.எம். சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி தேவை என்கிற மனிதாபிமானக் கோணம் இருக்க, மறுபுறம் அரசியல் நோக்கங்களுக்காக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்கிற நிலைப்பாடும் வலுப்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: விரைவில் தேர்தல் என மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இதுதான்! தவெக ஆட்சியை கவிழ்க்க சதி! சி.பி.எம். சண்முகம் விளாசல்!