காணாமல் போன கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு... கொந்தளிப்பில் உறவினர்கள்... கடலூரில் நடந்தது என்ன?
கடலூர் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் சாலை ஓரத்தில் சடலமாக மீட்பு; பொதுமக்கள் சாலை மறியல்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள பி.என். பாளையம் பகுதியை சேர்ந்த சபரிகிரி (20) கடலூர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார் இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஷ்வா (20) என்பவருடன் கடந்த 21-ந்தேதி இரவு ஆலப்பாக்கம் அருகே உள்ள பெத்தாங்குப்பம் கிராமத்திற்கு உறவினர் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஆனால் அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் 2 பேரும் கிடைக்கவில்லை. இதனால் பதறிய இருவரது பெற்றோரும், தங்கள் மகன்களை காணவில்லை என நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும் 2 நாட்களாக போலீசார், மாயமான 2 பேரையும் கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இருவரது உறவினர்களும் இன்று மாலை 6 மணி அளவில் மேல்பட்டாம்பாக்கத்தில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 7.15 மணி வரை நீடித்த நிலையில் மாயமான சபரிகிரி, விஷ்வா ஆகியோர் கடலூர் அடுத்த ராமாபுரம் அருகே விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் அருகில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: உயிரைக் குடித்த கள்ளக்காதல்... இளைஞரை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர்கள்... பகீர் பின்னணி...!
இதனால் அவர்களது உறவினர்கள் மறியலை கைவிட்டு ராமாபுரம் பகுதிக்கு திரண்டு சென்றனர். மேலும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மீண்டும் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நெல்லிக்குப்பம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் இரண்டு மணி நேரம் நீடித்த நிலையில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இருவரும் அதிவேகமாக வாகனத்தில் வந்து வாகனம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தார்களா அல்லது வேறு ஏதேனும் வாகனம் இடித்து இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் சபரிகிரி, விஷ்வா ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்களா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.