#BREAKING ரயில் மோதி சுக்கு நூறான பள்ளி வேன்.. நெஞ்சை உலுக்கும் கோரம்.. 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..!
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூரியில் இருந்து இன்று காலை 7 மணி அளவில் மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலானது செம்மங்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த 5 குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மாணவர் நிவாஸ் (12) சம்பவ இடத்திலெயே உயிரிழந்த நிலையில், மாணவி சாருமதி (16) படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் மற்றும் ஓட்டுநருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் ரயில் பள்ளி வேனை 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்படி இழுத்துச் செல்லப்பட்ட வேன் மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாங்கியதில் செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே மற்றும் கடலூர் துறைமுகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கேட் கீப்பர் உறங்கியதால் பள்ளி வேன் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றதால் விபத்து நேர்ந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரம் என்பதால் பள்ளி வேனில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காலையில் பள்ளி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்திருப்பது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.