×
 

“இபிஎஸ் அவர்களே... உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?” - எரிமலையாய் வெடித்த சி.வி.சண்முகம்...!

அம்மாவை முன்மாதிரியாகக் கொண்டு இந்த இயக்கத்தில் இணைந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகக் கூறி, அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் வந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணனிடம் புகார் மனு அளித்தார். அவருடன் அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகளும் வந்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேரம் அம்மா இருந்திருந்தால், உங்களுடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்? அம்மா இருந்திருந்தால் பெண்களை இவ்வாறு தொட முடியுமா? பெண்களைப் பற்றி இவ்வாறு பேச முடியுமா?

இதையும் படிங்க: சாரை சாரையாக படையெடுக்கும் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள்... அதிமுக தலைமை... தொண்டர்கள் கலக்கம்..!

பெண்கள் தைரியமாக பொதுவாழ்க்கைக்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது. இனிமேல் யாரும் பொதுவாழ்க்கைக்கு வர அச்சப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தில் மாவட்டக் கழக இணைச் செயலாளராக இருந்த என்னுடைய தாயாரை, பசுபதி நடத்திய ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தாக்கி, அவரது சேலையை இழுத்து வெளியேற்றினர்.

அதை கண்டித்து நான் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தற்போது போட்டித் தேர்வுக்காக சென்னையில் பயிற்சி பெற்று வரும், திருமணமாகாத என் மகளை அவதூறாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்திகளை வெளியிடுபவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை குறிவைத்து தாக்கும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை விழுப்புரம் மாவட்ட அரசியலில் பல்வேறு பிரச்சினைகளை நாம் பார்த்திருக்கிறோம். விவாதித்திருக்கிறோம், போராடியிருக்கிறோம், மோதியிருக்கிறோம். நாங்கள் ஆளுங்கட்சியாகவும் இருந்திருக்கிறோம்; திராவிட முன்னேற்றக் கழகமும் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சியாகவும் இருந்திருக்கிறோம்; அவர்களும் எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குடும்பப் பெண்களை தரக்குறைவாக சித்தரித்து, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் யாரும் செயல்பட்டதில்லை.

ஆண்களுக்குள் ஏற்படும் அரசியல் கருத்து வேறுபாடுகளை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆனால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இந்த இயக்கத்தில், இன்று பெண்கள் அவமானப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனையானது.

அம்மாவை முன்மாதிரியாகக் கொண்டு இந்த இயக்கத்தில் இணைந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இந்தக் கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். எனக்கும் இபிஎஸ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அது அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு.

நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்; அதற்கு உங்களுக்கு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. அதைப் போலவே, உங்களை விமர்சிக்க எனக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால், உங்கள் தலைமையின் கீழ், இந்த இயக்கத்தில் உழைத்த பெண்களை தரக்குறைவாக சித்தரித்து, மானபங்கப்படுத்தி, அவமானப்படுத்தும் வகையில் தகவல்களை பரப்புபவர்களை ஊக்குவிப்பது நியாயமா?

இபிஎஸ் அவர்களே, இது உங்களுக்கே அழகாக இருக்கிறதா? உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்; என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள்.

இதுதான் நீங்கள் கட்சி நடத்தும் முறையா?. அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? பெண்களை இவ்வாறு இழிவுபடுத்த யாருக்கும் துணிவு வந்திருக்குமா?. யாரோ ஒருவர், "இபிஎஸ் இருக்கிறார்; அவர் எதுவும் கேட்க மாட்டார்" என்ற எண்ணத்திலேயே இவ்வாறான அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

இதையெல்லாம் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காவல்துறை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது என்றார். 

இதையும் படிங்க: கூண்டோடு காலியாகும் விழுப்புரம் அதிமுக.? லெட்டருடன் கிளம்பிய சி. வி. சண்முகம் ஆதரவாளர்கள்..! வெடிக்கும் சர்ச்சை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share