×
 
☰

காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை! காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு!

காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரி ஆற்றில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) இன்று அதிரடியாகப் பரிந்துரைத்துள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று (08-10-2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் காணொலி வாயிலாகவும் நேரிலும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துப் பேசுகையில், தமிழகத்தில் சம்பா மற்றும் தாளடிப் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக நீர் தேவைப்படுகிறது. எனவே, வினாடிக்கு 12,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், தங்கள் மாநிலத்தின் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளில் தற்போது வெறும் 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களின் குடிநீர்த் தேவை மற்றும் தங்களின் உள்ளூர் விவசாயத் தேவைகளுக்கு இந்தத் தண்ணீரே போதுமானதாக இல்லை. எனவே, தமிழகம் கோருவது போல் வினாடிக்கு 12,000 கன அடி அளவுக்குத் தண்ணீர் திறந்துவிடவே முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இரு மாநில அதிகாரிகளின் வாதங்கள் மற்றும் தற்போதைய அணைகளின் நீர் இருப்பு நிலவரத்தை ஆய்வு செய்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா, வினாடிக்கு 3,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குக் காவிரியில் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

தமிழக அரசு 12,000 கன அடி கோரியிருந்த நிலையில், வெறும் 3,000 கன அடி மட்டுமே திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக டெல்டா விவசாயிகளிடையே கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரம்: கர்நாடகத்தின் அணுகுமுறை ஏற்க முடியாது! மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share