விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை...எவ்வளவு தெரியுமா?
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.2,906க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரான்–இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தியது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
இந்த நிலையில், போர் பதற்றம் தணிந்து, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் சீரடைந்து வருவதால், வணிக சிலிண்டர் விலையும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று மத்திய அரசு 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டெல்லியில் ரூ.202வும், கொல்கத்தாவில் ரூ.209வும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கொல்கத்தாவில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.2,872.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய விலை இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
கடந்த மாதத்திலும் வணிக எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது வழக்கம்போல முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்ட தடையால், இந்தியாவுக்கு தேவையான விநியோகம் பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்ந்ததுடன், வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்பதிவு நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
தற்போது விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், வணிக எரிவாயு சிலிண்டர் விலை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு இந்த விலை குறைப்பு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.