×
 

அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக மட்டுமே சமரசமின்றித் தொடர்ந்து உறுதியாக நிற்பதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களவைத் தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் திமுக தீர்க்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். 

தமிழகத்தின் தற்போதைய 7.18% நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் இடஒதுக்கீடும் மாற்றமின்றித் தொடர வேண்டும் என்பதை முன்னிறுத்தி, தென்மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து ஏற்கனவே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றித் தெளிவான வழிகாட்டியவர் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், தொகுதி மறுவரையறை கூடாது என்றும், 543 நாடாளுமன்றத் தொகுதிகளையும் மாற்றமின்றி அப்படியே முடக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திலும் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் விஜய், அமித் ஷாவைச் சந்தித்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நியாயமான மறுவரையறை என்று பேசியிருப்பது பாஜக மீதான அச்சத்தால் அடிக்கப்பட்ட அந்தர் பல்டியா என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகச் சாடினார்.

தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழகத்தின் விரோதிகள், எட்டப்பர்கள் என்று ராகுல் காந்தியே வெளிப்படையாகப் பேசியுள்ளார்; தற்போது கூட்டணிக் கட்சியான முதல்வர் விஜய்யே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள நிலையில், ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த எட்டப்பர் யார் என்பதற்கு முதல்வர் விஜய் மக்களிடம் விளக்கம் அளிப்பாரா? எனக் கேள்வி எழுப்பினார். 

மேலும், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் உரிமை விவகாரங்களில் முதல்வர் விஜய் அமைதி காப்பதாகக் குற்றம்சாட்டிய தயாநிதி மாறன், அரசியல் அனுபவமின்மை மற்றும் தவறான வழிகாட்டுதல்களால் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கக் கூடாது என்றும், தனது முரண்பாடான நிலைப்பாடு குறித்து மக்களிடம் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share