×
 

#BREAKING: விருத்தாச்சலம் அருகே கோர விபத்து: அரசு பேருந்து - கார்கள் மோதி 7 பேர் உடல் நசுங்கி பலி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரங்கேறிய கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, எழுத்தூர் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபக்கச் சாலையில் பாய்ந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது பேருந்து பலமாக மோதியதில், கார்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விருத்தாச்சலம் அடுத்த ஆவட்டி அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்து, லாரி மற்றும் கார்கள் என அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0": தேமுதிக கடலூர் நாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!

தற்போது வரை 7 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்தால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் எச்சரித்துள்ளனர். இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது.
 

இதையும் படிங்க: திருவாரூரில் கோர விபத்து: அரசு - தனியார் பேருந்துகள் மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share