×
 

“ரீல்ஸ்க்காக ரிஸ்க் வேண்டாம்!” ஓடும் ரயிலில் மாணவர்களின் மரண சாகசம்; தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை! 

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக, ஓடும் ரயிலில் பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபடுவர்களுக்கு தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதள ரீல்ஸுக்காக எடுக்கும் ரிஸ்க், உங்கள் மொத்த வாழ்க்கையையும் காவு வாங்கிவிடும்; ஆபத்தான ரயில் சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் மாணவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபகாலமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரயில்களில் பயணிக்கும்போது படிக்கட்டுகளில் தொங்குவதும், அதனை வீடியோ எடுத்துப் பதிவிடுவதையும் ஒரு பேஷனாகக் கொண்டுள்ளனர். இத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் செயல்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான சாகசக் காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ள அந்த வீடியோவில், சீருடை அணிந்த இரண்டு பள்ளி மாணவர்கள் ஓடும் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி, நடைமேடையில் (Platform) தங்களது காலணிகளை வைத்துத் தேய்த்துக் கொண்டே செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு நொடி பிடி நழுவினாலும் அல்லது நடைமேடையில் உள்ள தடுப்புகளில் கால்கள் மோதினாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையிலும், அந்த மாணவர்கள் சிரித்துக் கொண்டே இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தினமும் ஸ்கூல் பசங்க 10 நிமிஷம் இத செஞ்சே ஆகணும்..!! உ.பி அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!

இந்தச் சம்பவம் குறித்துத் தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், “இது போன்ற உயிருக்கு ஆபத்தான சாகசங்களுக்கு ‘NO’ என்று சொல்லுங்கள். ரீல்ஸுக்காக ரிஸ்க் எடுக்கும் நீங்கள், ஒரு நிமிடம் தவறினால் உங்கள் மொத்த வாழ்க்கையும் போய்விடும்” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் அனைவரும் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய ரயில்வே விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வது சட்டப்படி குற்றம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவர்களுக்குப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இதையும் படிங்க: படிப்பு இடைநிறுத்தத்தை தடுக்க.. மாணவர்களுக்கு பஸ் பாஸ்..!! ஒடிசா அரசு அட்டகாச அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share