வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலவும் இந்தத் தீவிர வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய தமிழகத் துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்கள் என மொத்தம் 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
பொதுவாக 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது என்பது, ஆழ்கடலில் பலத்த காற்றுடன் கூடிய புயல் அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்பதையும், துறைமுகங்களுக்கு உடனடி ஆபத்து இல்லை என்றாலும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதையும் குறிப்பதாகும்.
கடல் பரப்பில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான துறைமுகங்கள் அல்லது கடற்கரைக்குத் திரும்புமாறு கடலோரக் காவல் படையினர் மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வெளுக்கப்போகுது மழை... குடைக் கொண்டு போங்க மக்களே... 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்..!!