தமிழகத்திற்கு பயம் காட்டும் டெங்கு காய்ச்சல்... தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்...!
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அதிகப்படியான அல்லது கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எடிஸ் கொசுக்களை அழிக்கும் பணியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெங்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் மற்றும் தேவையற்ற மருத்துவக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்கள் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!
குறிப்பாக, சில தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், டெங்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை அரசு உருவாக்கி, கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வேண்டுகோளாக உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் கருதும் பட்சத்தில், மாநில சுகாதாரத்துறையின் அவசர உதவி மற்றும் புகார் எண்ணான 104-ஐ நேரடியாகத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப சிகிச்சைக் கட்டணம் தொடர்பான அதிகாரப்பூர்வமான கட்டண நிர்ணயம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், சில மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
எனவே, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் டெங்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேவையான அளவு ரத்தத் தட்டணுக்களும் அரசின் சார்பில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றீங்களா?... மரகதம் குமரவேலை விரட்டியடித்த மக்கள்... தவெகவுக்கு பின்னடைவு...!