வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தனது அதிகாரப்பூர்வ சிறப்பு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (21.09.2026) மாலை 5:30 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், 17.7° வடக்கு அட்சரேகை மற்றும் 87.8° கிழக்கு தீர்க்கரேகை பகுதிகளில் இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது ஒடிசாவின் பூரி நகருக்கு தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 470 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த வானிலை அமைப்பு தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் தீவிரமடைந்து 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக' (Deep Depression - புயலுக்கு முந்தைய நிலை) வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதனைத் தொடர்ந்து, அதே திசையில் மேலும் நகர்ந்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு முதல் 24-ஆம் தேதி அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஆந்திரா, ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை அறிக்கை!