×
 

மண்டகப்படியில் மயங்கி விழுந்த பக்தர்.. திருவிழா கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. சித்திரை திருவிழாவில் சோகம்..!

மதுரை சித்திரை திருவிழாவில் தரிசனத்துக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று கோலாகலமாகநடந்தது. முன்னதாக கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன் தங்க பல்லக்கில் அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.


தொடர்ந்து மதுரை மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதிகளில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்ட கள்ளழகர், தங்க குதிரை வாகனத்தில் பக்தர்கள் புடைசூழ, "கோவிந்தா" கோஷம் விண்ணை முட்ட வைகை கரை வந்தடைந்தார்.அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க, தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ''கோவிந்தா'' கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும்  இருந்து வந்த பக்தர்கள் இரவு முதலே தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை திரண்டு இருந்தனர்.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும்  மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (45) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் அவரது உடலை  பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலயே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கள்ளழகரை சாமி தரிசனம் செய்வதற்காக மண்டகப்படிக்கு வந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுத்தது சோகத்தை ஏற்படுத்தியது 


கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவிற்கான முக்கிய பிரமுகர்களை அனுமதித்த நிலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் கூட சாமி தரிசனம் செய்ய முடியாத சூழல் உருவானது. மேலும் மண்டகப்படியை சுற்றி கள்ளழகர் மூன்று முறை வலம் வருவதற்கு கூட நீண்ட நேரம் தாமதமானது பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான எந்தவித பாதைகளும் இன்றி அடைக்கப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்கள் அதிக அளவிற்கு மண்டக படிப்பகுதியில் அனுமதிக்கப்பட்டதால் யாரும் தரிசனம் செய்ய முடியாத சூழல் உருவானது.

இந்த நிலையில், கள்ளழகர் சித்திரை திருவிழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த பக்தர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share