×
 

போதைப் பொருளுக்கு செக்..! டிஜிபியாக பொறுப்பேற்றதும் அதிரடி காட்டும் மகேஷ் குமார் அகர்வால்..!!

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு தலைமை இயக்குநர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1994-ம் ஆண்டு பேட்ச் இந்தியக் காவல் பணி அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், தமிழ்நாட்டின் புதிய காவல்துறைத் தலைமை இயக்குநராகவும் போலீஸ் படைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக அப்பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, இன்று அவர் பொறுப்பேற்றார். 

மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்தவர். சட்டம் பயின்ற பின்னணியில், இளம் வயதிலேயே அதாவது இருபத்திரண்டு வயதில் இந்தியக் காவல் பணியில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்ட இவர், தமிழ்நாட்டில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னையில் பூக்கடை துணை ஆணையராகவும், போக்குவரத்துக் காவல் தெற்கு துணை ஆணையராகவும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் அயல் பணியாக சிபிஐயில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டார். தமிழ்நாடு திரும்பிய பின்னர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். மதுரை காவல் ஆணையராகவும், மீண்டும் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பொறுப்பு வகித்தார். சென்னை தெற்கு கூடுதல் ஆணையராகவும் பணியில் இருந்தார். 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராகப் பொறுப்பேற்று சட்டம் ஒழுங்குப் பணிகளை திறம்பட கையாண்டார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்ளிட்ட 17 பேருக்கு புதிய பொறுப்புகள்!

தற்போது அவர் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றார். கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். 

இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் கேசினோ திறக்க சதி!” - இபிஎஸ் ஆதரவாளர் ஆதி ராஜாராம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share