×
 
☰

முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ சென்ற பாதையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தீவிர தேர்தல் பிரச்சாரம் மற்றும் சாலைவலம் மேற்கொண்ட பாதையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலின் இறுதி நாளான இன்று, பிரச்சாரக் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரம் நகரின் பல்வேறு பிரதான வீதிகளில் வாகனப் பேரணியாகவும் சாலைவலமாகவும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி தாராபுரம் நகர் முழுவதும் வரலாறு காணாத அளவில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இதையும் படிங்க: ஓட்டுக்கு ரூ.6000...! தாராபுரத்தில் பணப்பட்டுவாடா ஜோர்..! நாதக வேட்பாளர் கார்த்திகா புகார்..!!

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பிரச்சார வாகனத்தில் வரவிருந்த பிரதான சாலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரெனப் பதாகைகளுடன் சாலையில் அமர்ந்து அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் கொடிகளுடன் சாலையின் குறுக்கே அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய நாதகவினரைக் கண்டு அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோதும், போராட்டக்காரர்களின் தீவிர எதிர்ப்பால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் கடுமையாகத் திணறினர்.

இதையடுத்து, பாதுகாப்பு வாகனங்களை உடனடியாக நிறுத்திய திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP), தனது வாக்கி-டாக்கி மூலம் கூடுதல் காவலர்கள் மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சம்பவ இடத்திற்கு விரைந்து வரும்படி அவசர உத்தரவு பிறப்பித்தார்.

கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சித் தொண்டர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி இழுத்துச் சென்று தடுத்து நிறுத்திய பின்னரே, முதலமைச்சர் விஜய்யின் வாகனப் பேரணி அப்பகுதியைக் கடந்து சென்றது.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஆவேசத்துடன் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, தமிழ்நாட்டில் விஜய் மட்டும் அரசியல் கட்சி நடத்தவில்லை; ஜனநாயக நாட்டில் அனைத்துக் கட்சிகளுக்கும் சம உரிமை இருக்கிறது; இவர் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களும் தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு வீடுகளில் முடங்க வேண்டுமா? பொதுமக்கள் வணிகம் செய்யக் கூடாதா? எதிர்க்கட்சிகள் களத்தில் வாக்கு சேகரிக்கக் கூடாதா? ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்று கொதித்துப் பேசினார்.

முதலமைச்சரின் பிரச்சாரப் பாதையிலேயே வேட்பாளரும் தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டுப் பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாராபுரம் தேர்தல் களத்தில் உச்சக்கட்ட பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share