தீரன் சின்னமலை வெண்கலச் சிலை திறப்பு!: காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் புகழை போற்றும் வகையில், ஈரோடு ஓடாநிலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஈரோட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர், தீரன் சின்னமலையின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் புதிய சிலை அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கொங்கு நாட்டின் வீரத் திருமகனாகக் கருதப்படும் தீரன் சின்னமலை, ஆங்கிலேயர்களை எதிர்த்து மூன்று முறை நேரடியாகப் போரிட்டு வெற்றி கண்டவர். வெள்ளையர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அவரது தியாகத்தையும், வீரத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!
ஓடாநிலையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் கலந்துகொண்டு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, மிகக் குறுகிய காலத்தில் இந்தப் பணிகளை முடித்துச் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சருக்குப் அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!