ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீதான நடவடிக்கை மற்றும் இழப்பீடு உயர்வு குறித்துத் தமிழக அரசும் சிபிஐயும் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இழப்பீட்டை உயர்த்தி வழங்குவது குறித்துத் தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதில் மனுத் தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது, காவல்துறையின் நிலையான விதிமுறைகளைப் பின்பற்றாமல், சீருடை அணியாத துப்பாக்கிச் சூடு வீரர்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
குற்றப்பத்திரிகையில் குளறுபடி: இவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரே ஒரு காவல் ஆய்வாளர் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிலுவையில் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த நிலையில், அரசு சார்பில் ரூ. 30 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், விசாரணை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "போலீஸ் சித்திரவதையால் இளைஞர் பலி"..! தமிழகம் யார் கையில்..? விளாசிய கனிமொழி..!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ மற்றும் அரசுத் தரப்பை நோக்கி அடுத்தடுத்து சரமாரி கேள்விகளை எழுப்பினர். மேலதிகாரிகளின் எந்தவித உத்தரவும் இல்லாமல், ஒரே ஒரு காவல் ஆய்வாளர் (Inspector) மட்டுமே தானாகத் துப்பாக்கியை எடுத்து 16 பேரையும் சுட்டாரா? ஏன் இந்த வழக்கில் இவ்வளவு கால தாமதம் ஏற்படுகிறது? அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட காவல் துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த 13 அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன.
அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 13 அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கை, மற்றும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்துத் தமிழ்நாடு அரசும், சிபிஐ தரப்பும் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இவ்விவகாரத்தைத் தனிப்பட்ட வேறு ஏதேனும் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும் எண்ணம் உள்ளதா என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும்.
அரசு மற்றும் சிபிஐ தரப்பின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு பெருமை: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழக வீரர் மணிமாறன் தேர்வு!