×
 

வருத்தமாவது தெரிவிச்சீங்களா? தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட தினம்! ஸ்டாலின், எடப்பாடியை வறுத்தெடுத்த சீமான்!

மே 18 நாளில் ஒரு வருத்தச் செய்தியை முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதிவு செய்தது உண்டா? எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்ததுண்டா? என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த மே 18 ஆம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது.  பல்வேறு அரசியல் கட்சிகள் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில், மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில், "உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்துக்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாதகவிற்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு..! சந்தோஷத்தின் உச்சத்தில் சீமான்..!

இதேபோல, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலும், கோவை கொடிசியா மைதானத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார். 'காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என நான்கு கட்சிகளுமே நாதகவிற்கு பகையாளிகள் தான் என தெரிவித்தார். 

போரை நடத்தியது யார்? ஒப்புக்கு சிங்களர்கள் கொன்றார்கள். நடத்தியது அன்றைய காங்கிரஸ் கட்சியும் அதன் ஆட்சியும். கூட நின்றது இன்றைய ஆட்சியாளர்களான திமுக. போராடி நிறுத்த வேண்டிய உயரத்தில் இருந்தது யார்? அன்றைய அதிமுக. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஒரு மாதம் பாராளுமன்றத்தையும் முடக்கிப் போட்ட பாஜக, பக்கத்தில் ஒரு தீவில் இத்தனை மக்களைக் கொன்று குவிக்கிறார்களே போரை தலையிட்டு நிப்பாட்டுங்கள் என்று பேசாத கட்சி பாஜக. இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நான்கு பேருமே தமிழ் பேரினத்தின் பகைவர்கள், எதிரிகள் என்றார்.

காங்கிரஸ் முதல்வராக ராஜசேகர் ரெட்டி இறப்பின் பொழுது தமிழக முதல்வர் கலைஞர் அரசு பொதுவிடுமுறை அறிவித்ததோடு அரைக் கம்பத்தில் கொடியை இறக்கி துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. அதேநேரம் இலங்கையில் நடைபெற்ற போரில் கொத்துக்கொத்தாக தமிழர்களும் மக்களும் இறந்த பொழுதும், பிராபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான பொழுதும் தமிழகத்தில் இங்கிருந்த ஆளும் கட்சிகள் அந்த நாளை துயர நாளாக, தமிழின மக்களின் துயரம் என்று அறிவித்து விடுமுறை விட முடியாதா? அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விட்டிருக்க முடியாதா? ஏன்? இந்த மண்ணில் எந்த கட்சி செய்தது. 


மக்கள் கொத்து கொத்தாக  இறந்த இந்த மே 18 நாளில் ஒரு வருத்தச் செய்தியை தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதிவு செய்தது உண்டா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்ததுண்டா? தமிழர்களின் வாக்கை வாங்கி வயிறு வளர்க்கும் இவர்கள் உன்னுடைய உணர்வுக்கு ஒரு மதிப்பு கொடுத்தார்களா? என்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: "உள்ளாடையை எதுக்கு கழட்டணும்".. நீட் தேர்வு கெடுபிடிகளால் கண்கள் சிவந்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share