'நம்ம கே.பாக்யராஜ்' அணி வெற்றி! எழுத்தாளர் சங்க புதிய தலைவரானார் சேரன்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் நம்ம கே பாக்கியராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர் அரங்கத்தில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் (South Indian Film Writers Association) தேர்தலில், 'நம்ம கே.பாக்யராஜ் அணி' சார்பாகத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபல இயக்குநர் சேரன் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்.
சங்கத்தின் 2026 - 2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த திரைத்துறை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி உமா சங்கர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!
துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், இயக்குநர் குகநாதன் தலைமையிலான 'திரைக்கதை மன்னன் K.பாக்யராஜ் அணி' வேட்பாளரை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்று இயக்குநர் சேரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள இயக்குநர் சேரனுக்கும், அவருடன் இணைந்து வெற்றி பெற்றுள்ள 'நம்ம கே.பாக்யராஜ் அணி' நிர்வாகிகளுக்கும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!