×
 

தமிழ்நாடு என்னவேணா செய்யட்டும்..! மேகதாது அணை கட்டுவது உறுதி... டி. கே. சிவக்குமார் திட்டவட்டம்..!

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர். மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

அதனை உச்ச நீதிமன்றம் முகாந்திரம் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையை சந்திக்க டெல்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசு என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளட்டும் எனவும் மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஒட்டுமொத்த கர்நாடக மக்களின் சார்பாக நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share