சிவக்குமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவை பட்டியல் ரெடி! சித்தராமையா மகனுக்கு அமைச்சர் பதவி!!
கர்நாடகாவில் முதல்வர் டி.கே.சிவகுமார் உட்பட 14 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திராவுக்கு அமைச்சர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றமாக, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று மாலை பதவியேற்க உள்ளார். இதையொட்டி, அவரது தலைமையிலான முதல் கட்ட அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 14 பேர் இடம்பெற்றுள்ள இந்த அமைச்சரவையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பார்கள் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வராக இருந்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதையடுத்து, புதிய அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் டி.கே. சிவகுமார் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். வெளியிடப்பட்ட அமைச்சரவை பட்டியலில் ஜி. பரமேஸ்வர் துணை முதல்வராக இடம்பெற்றுள்ளார். மேலும் கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜாரகிஹோலி, கிருஷ்ண பைரகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி. காதர், ஈஸ்வர் காந்த்ரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ் மற்றும் ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக யதீந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, சித்தராமையா ஆதரவாளர்களுக்கு முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை மூலம் காங்கிரஸ் கட்சி அனுபவம் மற்றும் இளம் தலைமுறை ஆகிய இரண்டிற்கும் சமநிலை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!