தொடரும் ஆணவப் படுகொலைகள்.. தனிச்சட்டம் இயற்றுங்கள்! திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்..!
ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் ஏற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கையை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு, சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் வற்புறுத்தி உள்ள நிலையில் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தியதாகவும், அனைத்தையும் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறினார்.
தமிழகத்தில் அதிக அளவில் சாதிய ஆணவ படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் சந்தித்ததாக தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சாதிய ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓயாத சாதி வெறியாட்டம்! அடக்கப்படாத ஆணவ படுகொலைகள்... கொதித்துப் போன திருமா..!
பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழ்நாடு, சாதிய வெறித்தனத்தில் இருந்தும் விடுபட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். தனிச்சட்டம் ஏற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருப்பதாக கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்து உள்ளதாகவும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
நீதிபதி ராமசுப்பிரமணியம் தனி சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருப்பதாகவும், சாதி ஆணவக் கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை என்றும் தெரிவித்தார். சென்னையில் வரும் ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும், பதினொன்றாம் தேதி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும் கூறினார்.
தனிச் சட்டம் இயற்றினால் ஓ பி சி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை என்றும் கூறிய திருமாவளவன், முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுத்தை எங்கயுமே சிறுத்தை தான்! பிரதமர் நிகழ்ச்சியில் திருமா.. வன்னியரசு விளக்கம்..!