திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!
RSS கருத்தை ஏற்றுள்ள நிறுவனங்கள்தான் அதிமுக கூட்டணிக்கு முன்னிலை என தெரிவித்து உள்ளன என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற உள்ள நிலையில், அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்கணிப்புகளும், வதந்திகளும் பரவி வருகின்றன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர். கள நிலவரப்படி எமது கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது உறுதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கு முன்னிலை எனத் தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது, வட இந்தியாவைச் சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்ட வலதுசாரி கருத்தியல் நிறுவனங்களே இத்தகைய முடிவுகளை வெளியிடுகின்றன. அவர்களின் நோக்கம் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவான பிம்பத்தை உருவாக்குவதுதான். இத்தகைய வாரிசுச் செய்திகளை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று அவர் சாடினார்.
இதையும் படிங்க: நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!
சமீபத்தில் விசிக தொண்டர்களிடையே அவர் பேசிய சில கருத்துகள் சர்ச்சையானது குறித்து விளக்கிய அவர், அது எங்கள் கட்சித் தோழர்களை நெறிப்படுத்துவதற்காக நான் பேசியது. ஓரிரு தொகுதிகளில் நிலவிய உட்கட்சிப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினேனே தவிர, அது ஒட்டுமொத்தக் கூட்டணியைப் பாதிப்பதாகாது. விசிக தொண்டர்கள் திமுக கூட்டணிக்காக ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது என்பதை வேட்பாளர்களே என்னிடம் தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தச் சிலர் முயல்கிறார்கள், அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது என்றார்.
தற்போது நிலவும் பெட்டிங் (Betting) மற்றும் வதந்திகள் குறித்துப் பேசிய திருமாவளவன், தேர்தல் முடிவுகளை வைத்து ஒரு சூதாட்டக் கும்பல் இயங்கி வருகிறது. குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெயரை முன்னிறுத்திப் பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. வதந்திகளைப் பரப்பிப் பணத்தைச் சுருட்டும் இந்தக் கும்பலின் ஆசையில் மண் விழுந்துவிடும். நாளை தேர்தல் முடிவுகள் வரும்போது இவர்களின் சதித் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படும் என்று எச்சரித்தார்.
வாக்கு எண்ணிக்கையின் போது உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரி திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்துப் பேசுகையில், "இது ஒரு புதிய நடைமுறை அல்ல. தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்கச் சதி நடப்பதாகத் தகவல் வரும்போது, அதற்கேற்ப பாதுகாப்பு கோருவது ஒரு பொறுப்புள்ள கூட்டணியின் கடமையாகும். அந்த வகையில் திமுகவின் கோரிக்கை நியாயமானது" என்று அவர் ஆதரவு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!