முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!
அமைச்சர் சரத்குமார் விவகாரத்தில் முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் திமுக மாணவரணி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, போராட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா. சுப்பிரமணியன் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை, அமைச்சர் சரத்குமார் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், போராட்டத்துக்கு முறையாக அனுமதி கோரியிருந்தும் காவல்துறை அனுமதி வழங்காமல், ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ததாக குற்றம்சாட்டினார்.
கடந்த திமுக ஆட்சியில் ஜனநாயக முறையில் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கும் சூழல் உருவாகியுள்ளதாக விமர்சித்தார். மேலும், கடந்த ஒன்றரை மாதங்களாக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளையும் மக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்?! உளவுத்துறை வாயிலாக CM விஜய் ரகசிய விசாரணை!
அமைச்சர் சரத்குமார் தொடர்பாக வெளியான வீடியோ சர்ச்சையை குறிப்பிட்ட மா. சுப்பிரமணியன், அமைச்சர் அளித்த விளக்கத்தில் பல கேள்விகள் எழுகின்றன என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் கூறினார். அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தேவையெனில் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையும் அவர் கடுமையாக விமர்சித்து, தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்தால் திமுக தலைமையின் அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையில், மா. சுப்பிரமணியன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு அல்லது அமைச்சர் சரத்குமார் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜுலை 5ல் லண்டன் பயணம்!! உதயநிதி, இன்பநிதியும் உடன் செல்கின்றனர்!