தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா.! அவசர அவசரமாக நிறைவேற்றியது ஏன்.? கோவி. செழியன் சரமாரி கேள்வி..!
தனியார் பல்கலைக்கழகம் மசோதாவை அவசர அவசரமாக தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்றியது ஏன் என்று கோவி செழியன் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், தமிழக வெற்றிக் கழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றிய தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகநீதியைச் சீர்குலைத்து உயர்கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.நேற்று சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026-ஐ சுட்டிக்காட்டிய செழியன், “ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல், முதலமைச்சர் விஜய்க்கு எம்.எல்.ஏ.க்களை மக்கள் கொடுத்திருக்கும் இந்த நேரத்திலும் தமிழக வெற்றிக் கழக அரசின் அடாவடி மற்றும் ஆணவ நடவடிக்கைகள் எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்துவிடும்” என்று கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு சட்டத்தில் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 100 ஏக்கர் நிலமும், பிற பகுதிகளில் 50 ஏக்கர் நிலமும், நிரந்தர நிதிநிலைப்படுத்தல் நிதியாக 50 கோடி ரூபாய் வைப்புத்தொகையும் அவசியமாக இருந்தன. இப்போது சென்னையில் 12 ஏக்கர், முனிசிபல் பகுதிகளில் 18 ஏக்கர், கிராமப்புறங்களில் 25 ஏக்கர் என நில அளவு குறைக்கப்பட்டுள்ளது. நிதிநிலைப்படுத்தல் நிதியும் 25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சலுகை ஏற்கனவே இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பின்தேதியிட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் ஆகஸ்ட் 24 அன்றே முடிந்துவிட்ட நிலையில், 15 நாட்கள் கழித்துக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இத்தகைய திருத்தத்தை அவசரமாகக் கொண்டுவந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நில அளவுகளை அதிரடியாகக் குறைத்ததும், நிதியைப் பாதியாகக் குறைத்ததும் யாருக்காக என்பதையும் அவர் கேட்டுள்ளார்.தனியார் பல்கலைக்கழகம் திவாலானால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிதிநிலைப்படுத்தல் நிதியைக் குறைப்பது அவர்களின் நலனுக்கு உலை வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கஜானா காலி என்று கூறி மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றும் அரசு, ஏற்கனவே அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏன் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் 100 கோடி ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கை அவற்றை மேலும் பலவீனப்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!
புதிய பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று புற்றீசல் போல் பெருகினால், பேரறிஞர் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுப் பல்கலைக்கழகங்களின் நிலை என்னவாகும் என்று அவர் கேட்டுள்ளார்.முந்தைய அரசில் இதேபோன்ற சலுகை கோரிக்கை வந்தபோது மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு கைவிடப்பட்டது என்பதை நினைவூட்டிய செழியன், இப்போது புதிய அரசு ஏழை, எளிய மாணவர்களின் கலந்தாய்வு வாய்ப்பைப் பறித்து சமூகநீதிக்கு வேட்டு வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், உயர்கல்வியை வணிகமயமாக்கும் இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இப்படி தான் கடனை குறைப்பீங்களா.? எதுக்கு அறிக்கை.? எதுக்கு விவாதம்... விளாசிய சீமான்..!!