மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!
தேர்தல் வரும் போது, திமுகவினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி திமுகதான் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திமுக அரசை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களை ஏமாற்றுவதில் திமுக ஒரு நம்பர் 1 கட்சி எனச் சாடினார்.
ஒரு திட்டத்தை முதல்வர் அறிவிப்பார், உடனே அதற்கு ஒரு குழுவை அமைப்பார். ஆனால், அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போய்விடும். இதுவரையில் 52 குழுக்களை அமைத்தீர்களே, அந்தக் குழுக்கள் செய்த சாதனை என்ன? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அறிவிப்புகளோடு மட்டும் நின்றுவிடும் விசித்திரமான ஆட்சி இது என அவர் விமர்சித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட 525 தேர்தல் வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கை (1/4th) கூட இந்த அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். நகைக்கடன் தள்ளுபடி முதல் எரிபொருள் விலை குறைப்பு வரை அனைத்திலும் மக்களைத் திமுக ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!
தேர்தல் வரும்போது மட்டும் திமுகவினர் மிகக் கவர்ச்சிகரமாகப் பேசுவார்கள். தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மக்களை நம்ப வைப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள்" என அவர் பேசினார்.
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மாநிலத்தின் நிதி நெருக்கடி ஆகியவற்றுக்குத் திமுகவின் தவறான நிர்வாகமே காரணம் என்று தெரிவித்த அவர், அதிமுக ஆட்சிக் காலத் திட்டங்களையே தற்போது ஸ்டாலின் அரசு பெயர் மாற்றி (Rebranding) நடத்தி வருவதாகச் சாடினார்.
ஸ்டாலின் அவர்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது. இது சட்டமன்றத் தேர்தல் என்பதை அவர் மறந்துவிட்டார். மக்கள் திமுகவை அடையாளம் கண்டு கொண்டுவிட்டார்கள்; எனவே, இம்முறை மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.
இதையும் படிங்க: திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!