"பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?
65% மக்கள் உங்களை வேண்டாம் என்றுதான் வாக்களித்துள்ளனர்; பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக 107 இடங்களில் வென்று, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடுதான் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது, மற்ற கட்சிகளை எல்லாம் 'அல்லு சில்லு' எனக் கூற முதலமைச்சருக்குச் சங்கடமாக இல்லையா?" என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்துப் பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியதாவது:
அசாம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் டெல்லியில் பிரதமரை 40 நிமிடங்கள் வரை சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெறும் 10 நிமிடங்கள் மட்டும்தான் பிரதமரைச் சந்தித்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விஜய் Bro, உங்களது வீரம் பிரதமரிடம் எங்கே போனது? ஏன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் கார் ஏறி அவசரமாக ஓடினீர்கள்? தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய உரிமைகளைக் கேட்டுப் பெற்றீர்களா? சட்டமன்றத்தில் உங்களது உரையாற்றும் முறையையும், திருச்சியில் கர்ஜித்ததாகக் கூறிக்கொண்டு கத்தியதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை விளங்கும். சினிமா நடிகருக்கான கவர்ச்சி அரசியலில் இருந்து தமிழ்நாடு தற்பொழுது வெளியே வர வேண்டும் என்று நாங்கள் மக்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்!
ஏற்கெனவே கையெழுத்திட்ட திட்டங்களை தவெக அரசு ஏன் இன்னும் தொடங்கி வைக்கவில்லை? உங்களது 'சிங்கப்பெண்' திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதரவு என்ன? 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் திமுக தன் ஆட்சிக் காலத்தில் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை; மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டிற்குள் விடவில்லை. ஆனால், தற்பொழுது திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுவதைக் கேட்கக்கூட தவெக-வுக்குத் துப்பில்லை. கச்சத்தீவு பற்றிப் பேசினால் 'நோ கமெண்ட்ஸ்' என்றும், திருவள்ளுவர் விவகாரம் குறித்து 'இப்போது பேச வேண்டாம்' என்றும் தவெக அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள்.
"மேகதாது அணை விவகாரத்தில் திமுக-வும் ஸ்டாலினும்தான் எங்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தார்கள், இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை" என்று கர்நாடகத் தலைவர் டி.கே.சிவகுமார் தற்பொழுது வெளிப்படையாகக் கூறி வருகிறார். மேலும், "எங்களது தயவில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது" என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதைச் செய்தியாளர் சந்திப்பில் இருந்த திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நான்தான் எனப் பெருமை பேசுகிறீர்கள். அரசியல் அமைப்புச் சட்டப்படி நீங்கள் வென்றதில் சந்தேகமில்லை. ஆனால், 65% மக்கள் உங்களை வேண்டாம் என்றுதான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியபோது உங்களது உடல்மொழி எங்கே சென்றது?" என்று சாடினார்.
தேர்தல் சமயத்தில் விடுதலைச் சேர்க்கைகள் கட்சி (விசிக) மீது திமுக அதிக விமரிசனங்களை வைத்தது ஏன் என்ற கேள்விக்கு ஆ.ராசா உருக்கமாகப் பதிலளித்தார். "யார் மீது நாம் அதிக பாசம் வைத்திருக்கிறோமோ, அந்தப் பாசம் முரண்படும்போதுதான் கோபம் அதிகமாக வரும். நாங்கள் விசிக மீது சித்தாந்த ரீதியாக அதிக பாசம் வைத்திருந்தோம்; காங்கிரஸ் மீது அப்படி வைக்கவில்லை. சொந்தத் தம்பியோ, அண்ணனோ நாம் எதிர்பார்த்த நம்பிக்கையைக் கொடுக்கவில்லை என்றால் கோபம் வருவது இயற்கைதான். ஆனால், பிறகு மீண்டும் சேர்ந்து கொள்வோம். அப்படித்தான் விசிக மீது கோபத்தில் அன்று நாங்கள் பேசியிருப்போம், அவர்களும் பேசியிருப்பார்கள். இது வெறும் 'சகோதர முரண்பாடு' மட்டுமே; இது ஒருபோதும் நிரந்தரமானது அல்ல" என்று ஆ.ராசா தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!